Tuesday, July 19, 2016

சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.


சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!
சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம் முற்றிற்று.

Sunday, July 3, 2016

Thursday, November 19, 2009

ArutperumJothi

ArutperumJothi ArutperumJothi
ThaniperumKarunai ArutpermJothi